பின்னர் நடிப்பு; சுஜாதா, ரஜினி, கமல், ரவிகுமார் மட்டுமல்ல, ரஜினியின் அம்மா பாத்திரத்தில் வந்து கடைசிக் காட்சியில், "நான் உங்கூடவே வரேன், மாமியாரா இல்ல, உன் குழந்தையைப் பார்த்துக்கற வேலைக்காரியா" என்று சொல்லி, எதற்கும் கரையாத 'அனு' பாத்திரத்தையே கரைத்துவிடும் லீலாவதி உள்பட அனைவருமே மிகச் சிறந்த நடிப்பை நல்கியிருந்தார்கள். ஆனால் இந்த எல்லா அம்சங்களையும் தூக்கிச் சாப்பிடும் ஒன்று கவியரசு கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும் அளித்த மகத்தான பங்களிப்பு.
பொதுவாக பாலச்சந்தர் படங்களில் பின்னணி இசைக்குத் தனிக் கவனம் செலுத்தப்பட்டிருப்பதைக் கவனித் திருப்பவர்கள், 'அவர்கள்' படத்தில் அது கூடுதல் உழைப்பில் அமைந்திருப்பதை நோக்க முடியும். அப்புறம் பாடல்கள். அவற்றின் தாக்கத்தை எளிதில் வடித்துவிட முடியாது!
காற்றுக்கென்ன வேலி
இழந்த காதலையும், ஏற்ற சோக மண வாழ்வையும் தனது குழந்தையை உறங்க வைக்க இசைக்கும் தாலாட்டில் இழைக்கிறாள் அனு (சுஜாதா). 'இப்படியோர் தாலாட்டு பாடவா அதில் அப்படியே என் கதையைக் கூறவா...' என்று தொடங்கும் இதமான பல்லவி, பின்னர் சரணத்தில், 'அன்றொரு நாள் மீராவும் கண்ணனை நினைந்தாள்/ ஏனோ அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள்/ அதுவரைதான் தன் கதையை என்னிடம் சொன்னாள்/ நான் அதிலிருக்கும் என் கதையை உன்னிடம் சொன்னேன்...' என்று ததும்புகையில், பாடல் காற்றில் கலந்து பரவிய மண்ணெங்கும் எத்தனை எத்தனை காதல் தோல்விகளின் பெருமூச்சில் எதிரொலித்தது! அந்த ஏக்கப் புல்லாங்குழலில் கசிந்தது காதல் கண்ணீரல்லவா?
தனக்குப் பிடித்த முறையில் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் துணிச்சல் முடிவை எடுக்கும் அனு, சுதந்திர உணர்வின் உச்சத்தில் மிதக்கும் கதாபாத்திரம். அந்தச் சுதந்திர உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சிக்கான பாடல், தமிழ்த் திரைப்படப் பாடல் வரிசையில் அமர்க்களமான ஒன்று. 'காற்றுக்கென்ன வேலி/ கடலுக்கென்ன மூடி/ கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது/ மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது?...' என்று உற்சாகக் கூக்குரலில் புறப்படும் அந்தப் பாடலின் சந்தமும், கவிதை வேகமும், சொற்களின் வீச்சும் அதற்குப் பாந்தமான தாளகதியில் அமைந்த அந்த மெட்டும் அபாரமானவை.
பாலச்சந்தர் காட்சித் தொகுப்பைத் தனது விருப்பத்திற்கேற்ப எடுத்துக் கொடுத்து, அதற்கேற்ப இசையும் பாடலும் அமையட்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் எம்.எஸ்.வி. - கவியரசு இருவரது கூட்டணி இப்படிக் கலக்கியிருந்தது. இரண்டு எதிரெதிர் உளவியல் மனநிலைகளைப் பிரதிபலிக்கும் மேற்கண்ட இரண்டு பாடல்களையும் எஸ்.ஜானகி அசாத்தியக் குரலழகில் அற்புதமாகப் பாடியிருப்பார்.
பொம்மைக் குரலில் உண்மையின் குரல்
கமல் ஹாசன் பாத்திரத்திற்கேற்ப அந்தப் பொம்மையோடு இயைந்த பாடலான 'ஜுனியர்… ஜுனியர்…' என்ற பாடல் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பாடல்களில் ஒன்று. 'சித்திரை மாதம் மழையைத் தேடி வாடுகிறாய், மார்கழி மாதம் வெயிலைத் தேடி ஓடுகிறாய்…' என்று தன்னைக் குறித்த சுயவிமர்சனமாகத் தனக்குள்ளேயே எதிரொலித்துக்கொள்ளும் விதத்திலான அந்தப் பாடலில் பொம்மைக்கான குரலைச் சிறப்பாகக் கொடுத்திருப்பார். 'அடுத்தவர் ராகம்/ அதை நீ பாடுதல் பாவமடா' என்ற வரிக்கு, 'If it is apoorva raagam?' என்ற பொம்மையின் பதிலும் பாடல் முழுக்க சோக ஹாஸ்யக் குரலில் ஒலிக்கும் எஸ்.பி.பி.யின் தனித்திறனும் மறக்க முடியாதவை.
அரிதாய் அமைந்த வரிகள்
'அவர்கள்' படத்தின் திரைக்கதை முடிச்சை, கவியரசு மிக எளிமையாகக் கொண்டு வந்திருந்த, 'அங்கும் இங்கும் பாதை உண்டு/ இன்று நீ எந்தப் பக்கம்…' என்ற பாடல், உள்ளபடியே அவர் வடித்த சிற்பம். 'கல்லைக் கண்டாள்/ கனியைக் கண்டாள்/கல்லும் இங்கு மெல்ல மெல்லக் கனியும் மென்மை கண்டாள்…' என்று புறப்படும் முதல் சரணமும் சரி, 'கண்ணா என்றாள் முருகன் வந்தான்/ முருகா என்றாள் கண்ணன் வந்தான்/ எந்தத் தெய்வம் சொந்தம் என்று கூறிப் பூஜை செய்வாள்?' என்று தொடங்கும் இரண்டாவது சரணமும் சரி; மிக நேர்த்தியாகப் பின்னப்பட்ட புனைவு.
மூன்றாவது சரணத்தைப் பற்றிச் சொல்லாமல் எப்படி? 'சொந்தம் ஒன்று/ பந்தம் ஒன்று/ வெள்ளை உள்ளப் பிள்ளை ஒன்று/ நடுவே ஊஞ்சல் ஒன்று' என்ற வரியும், அதையடுத்து 'தொடர்கதையோ, பழங்கதையோ, விடுகதையோ, எது இன்று?' என்ற வரியும் அரிதாக வந்து அமையக்கூடிய பாடல் வரிகள். மூவரில் யாரை வாழ்க்கைத் துணையாகத் தேர்வுசெய்வது என்று திண்டாட வைக்கும் நிகழ்ச்சிப் போக்குகளின் பின்புலத்திலான அந்தப் பாடலை எஸ்.பி.பி. உள்ளத்தைத் தீண்டி உருக்கும் வண்ணம் தமது மென்குரலில் வழங்கியிருப்பார்.
அவரவர்கள் அவர்களாகவே இருப்பதும், நாயகி அனு, அவளாக இருப்பதும் அதில் நழுவிப் போகும் காதலை, உடைந்து போகும் மெல்லிதயங்களை, நொறுங்கும் உணர்வுகளை இசையும் கவிதையும் அடுத்தடுத்த தலைமுறையையும் எட்டிக் கடந்து சொல்லிச் சென்றுகொண்டிருப்பதைத் தமிழ்த் திரைப்பட வரலாறு தனியே குறித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு 'அவர்கள்'அழுத்தமான உதாரணம்.
*******